இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில், யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா' ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இயக்குனர் பா ரஞ்சித், தன்னுடைய சொந்த பட நிறுவனமான நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படத்தைத் தொடர்ந்து தற்போது 'பொம்மை நாயகி' என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இதில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை சுபத்ரா, மூத்த நடிகர் ஜிஎம் குமார், ஹரி, விஜய் ரி வி புகழ் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன், அறிவு ஆகியோர் எழுதும் பாடல்களுக்கு சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் பங்குபற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

பா. ரஞ்சித்தின் தயாரிப்பு என்பதாலும், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார் என்பதாலும், இந்த திரைப்படம் வட தமிழக பகுதி மண்ணின் மணத்தை அழுத்தமாக பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.