(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இது வரையில் 2710 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 2600 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

மேல் மாகாணத்திற்கு வெளியில் ஏனைய பகுதிகளில் இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 2710 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 2600 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், அங்கு காணப்படும் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் பஸ்கள் , வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.