(இராஜதுரை ஹஷான்) 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க முன்னெடுக்கும் போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக மாற்றியமைக்க வேண்டாம்.

கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.

இல்லாவிடின் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகஹேன்ன தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு துறைமுகத்தின் 3 ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக துறைமுக ஊழியர் சங்கத்தினர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் போது ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு விற்கவோ, குத்தகை அடிப்படையிலோ வழங்கவில்லை என அரசாங்கம் பொய்யுரைக்கிறது.

முதலீட்டு ஊக்குவிப்புக்காக மாத்திரம் கிழக்கு முனையம் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்க்க மாட்டோம் என அரசாங்கம் குறிப்பிட்டமை வெறும் தேர்தல் பிரச்சாரமாகவே காணப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க துறைமுக ஊழியர் சங்கத்தினர் ஆரம்பத்தில் இருந்து அதாவது கடந்த ஆகஷ்ட் மாதத்தில் இருந்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் அமைப்பு என்று பிரத்தியேக அமைப்பு 22 தொழிற்சங்கங்களை  உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11ஆம் திகதி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தோம்.

கிழக்கு முனையத்தின் 49 சதவீத உரிமம் இந்திய நிறுவனத்துக்கும்,51சதவீத உரிமம் துறைமுக அதிகார சபைக்கும் வழங்கப்படும்  என்பதை ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டார். இந்த உரிம பகிர்வு வீத நிலைப்பாட்டில் இருந்து அறிக்கை சமர்ப்பியுங்ள் என்று குறிப்பிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து நியமிக்கப்பட்ட குழுவினர் அரசாங்கத்திற்கு சார்பாகவே அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையினால் அபிவிருத்தி செய்ய முடியும் என்ற யோசனையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆட்சி மாற்றமடையும் போது ஒவ்வொரு அரசாங்கங்களும் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்க விற்பது வழமையாகவே உள்ளது.

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.இல்லாவிடின் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்போராட்டங்களை முன்னெடுப்போம்.நாடுதழுவிய ரீதியில் உள்ள தொழிற்சங்கங்களை இணைத்துதொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படவும் தயாhக உள்ளோம் என்றார்.

(படங்கள் -தினித் சமல்க)