(நா.தனுஜா)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு, இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய 'எக்னெலிகொட சங்சதய' என்ற இணையப்பக்கம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

Articles Tagged Under: பிரகீத் எக்னெலிகொட | Virakesari.lk

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார்.

அவருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ச்சியாகப் போராடிவருகின்றார்.

இந்நிலையில் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு நாளை மறுதினத்துடன் 11 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. அதனை முன்னிட்டு பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விபரங்கள், அவரால் எழுதப்பட்ட கட்டுரைகள், அவரால் வரையப்பட்ட கார்ட்டூன்கள் மற்றும் இலங்கையில் காணாமலாக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கதைகளை சேகரித்து இணையப்பக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

'எக்னெலிகொட சங்சதய' என்ற அந்த இணையப்பக்கத்தின்  அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 4 - 6 மணிவரை என்.எம்.பெரேரா கேட்போர்கூடத்தில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானோரின் பங்களிப்புடன்  நடைபெறவுள்ளது என்று பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். 

தற்போது நிலவும் சுகாதாரப்பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்குரார்ப்பண நிகழ்வை தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்புச்செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.