ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் அபுதாபி டி-10 கிரிக்கெட் லீக்கில் பங்கேற்கவிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கையானது மூன்றாக குறைவடைந்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த லீக்கில் முன்னதாக 13 இலங்கை வீரர்கள் பங்கெடுப்பார்கள் என்று கூறுப்பட்டிருந்தது. 

எனினும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலைமையினால் அந்த எண்ணிக்கை இவ்வாறு குறைவடைந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணை காரணமாக சில சிரேஷ்ட தேசிய வீரர்களுக்கு அபுதாபி டி - 10 கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காயங்களைத் தடுப்பதற்காகவும், தேசிய வீரர்களுக்கு ஓய்வினை வழங்குதவற்காவும் போதுமான நேரம் தேவை என்பதனை கருத்திற் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

எனவே, வரவிருக்கும் அபுதாபி டி - 10 கிரிக்கெட் லீக்கில் மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாத்திரம் இடம்பெறுவார்கள்.

அதன்படி மத்தீஷ பதிரன, பங்களா புலிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார், மகேஷ் தீக்ஷனா மற்றும் தனஞ்சய லக்ஷான் ஆகியோர் வடக்கு வாரியர்ஸ் அணிக்காக விளையாடுவார்கள்.