(நா.தனுஜா)

பம்பலப்பிட்டி மஜெஸ்டிக் சிட்டி பல்பொருள் அங்காடிக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், கொழும்பு பிராந்திய சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவ சுகாதார அதிகாரி வைத்திய நிபுணர் ஸ்ரீபிரதாபன் தெரிவித்தார்.

வெள்ளவத்தை பிரதான சந்தைத்தொகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியின் பல்வேறு பகுதிகளிலும் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நேற்று பம்பலப்பிட்டி மஜெஸ்டிக் சிட்டி பல்பொருள் அங்காடி, யுனிட்டி பிளாஸா மற்றும் மஜெஸ்டிக் சிட்டி கட்டடத்தொகுதிக்குப் பின்னாலுள்ள வாகனத்தரிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றுவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த முடிவுகளின்படி வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, நாரஹென்பிட்டி உள்ளிட்ட கொழும்பின் சில பகுதிகளில் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை டிக்மன்ட் வீதியில் அமைந்துள்ள தபால் நிலையம், டெலிகொம், கடைத்தொகுதிகள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் மற்றும் தொடர்மாடிக்குடியிருப்புக்களில் வசிப்போருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் முடிவுகள் நாளையதினம் கிடைக்கப்பெறும் என்றும் வைத்திய நிபுணர் ஸ்ரீபிரதாபன் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.