இவ்வருடம் மார்ச் மாதம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை மேல்மாகாணத்தில் உள்ள 907 பாடசாலைகள் மீளத்திறக்கப்படவுள்ளன.

அதேவேளை மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஏனைய வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளும் கடந்த 11 ஆம் திகதி முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிக்கப்பட்டன.

 

அதன்படி மேல்மாகாணத்தில் உள்ள 11 கல்வி வலயங்களின் கீழ் 1576 பாடசாலைகள் காணப்படுகின்றன.

அந்தப் பாடசாலைகளில் இருந்து சுமார் 79 ஆயிரம்  மாணவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.

எனவே இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்காக மாத்திரம் மேல்மாகாணத்தில் உள்ள 907 பாடசாலைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.

அதேவேளை மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஏனைய வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.