வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மக்கிலானை பள்ளிமடு வயல் பிரதேசத்தில் 2 வார காலமாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் விவசாயிகள் தமது வயலுக்கு செல்லும் வழியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைக் கண்டு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்களத்திக்கு தகவல் வழங்கியதாக தெரிவித்தனர். 

யானையின் வாய்ப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நோய்வாய்பட்டு இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

கடந்த இரண்டு வாரங்களாக தவணைக் கண்டம்,அடம்படி வட்டவான்,பருத்திச் சேனை போன்ற கண்டங்களில் நெற் பயிர்களை சேதப்படுத்தியதுடன் காவல் குடிசைகளையும் சேதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நான்கு நாட்களாக குறித்த யானையை காட்டு பிரதேசத்திற்கு விரட்டியிருந்தனர்.

மீண்டும் அவ் பிரதேசத்தில் நடமாடியதால் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அதற்கு நோய் ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர். அதற்கான சிகிச்சையளிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்த வேளை  வியாழக்கிழமையன்று உயிரிழந்துள்ளதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே யானையின் சடலத்தினை அப்பிரதேசத்தில் இருந்து அகற்றி தருமாறும் யானைகளின் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாத்து தருமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்கின்றனர்.