டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திகளை ஜப்பானிய அரசாங்கம் இன்று மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஜப்பானின் துணை தலைமை அமைச்சரவை செயலாளரும், அரசாங்க செய்தித் தொடர்பாளருமான மனாபு சாகாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

டோக்கியோ ஒலிம்பிக்கை இரத்து செய்வது குறித்த முன்னதாக வெளியான அறிக்கையில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்கனவே தாமதமான டோக்கியோ ஒலிம்பிக் இந்த ஆண்டு இரத்து செய்யப்படும் என்று ஜப்பானின் அரசாங்கம் தனிப்பட்ட முறையில் முடிவு செய்ததாக டைம்ஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந் நிலையிலேயே ஜப்பானின் துணை தலைமை அமைச்சரவை செயலாளர் மனாபு சாகாய் மேற்கண்டவாறு கூறியுள்ளதுடன், விளையாட்டுகளை நடத்த அரசாங்கம் முழுமையான தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

2020 ஒத்திவைக்கப்பட்ட டோக்கிய ஒலிம்பிக் போட்டிகளானது ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த மாத தொடக்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை காரணமாக டோக்கியோ அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

மேலும் நிகழ்வை முழுவதுமாக இரத்து செய்வதில் பொதுமக்கள் கருத்து வலுவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.