10 டச்சு நாட்டு சுற்றுலாப் பயணிகள் எமிரேட்ஸ் விமானத்தின் மூலமாக நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

வர்த்தகத்திற்காக இலங்கை விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் நாட்டுக்கு வருகை தந்த முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழு இதுவாகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து ஈ.கே.-648 என்ற எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்திலேயே இவர்கள் நேற்றிரவு 10.30 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர்.

டச்சு சுற்றுலாப் பயணிகளில் ஐந்து குழந்தைகள் அவர்களது பெற்றோர்களும் இருந்தனர்.

பின்னர் அவர்கள் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், பெந்தோட்ட கடற்கரை ஹோட்டலில் தங்குவதற்காக புறப்பட்டனர்.

இதேவேளை இன்று காலை ஐந்து ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -668 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.35 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இது இவ்வாறிருக்க தொழில்வாய்புக்காக பஹ்ரைனுக்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 186 இலங்கையர்கள் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -202 என்ற விமானத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பின்னர் அவர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.