தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பில் முறைப்பாடு செய்த பல அவுஸ்திரேலிய ஓபன் போட்டியாளர்களில் ஒருவரான ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசா கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தியதன் பின்னர் வியாழக்கிழமை மெல்போர்னில் மேற்கொண்ட சோதனையின்போதே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக படோசா தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் தனிமைப்படுத்தலில் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ள நான்காவது போட்டியாளர் படோசா ஆவார்.

கொரோனா தொற்றின் பின்னர் அவர், "மன்னிக்கவும் தோழர்களே" தனிமைப்படுத்தப்பட்ட விதிகளைச் சேர்ப்பது அவசியமானது என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந் நிலையில் உலகளவில் ஒற்றையர் பிரிவில் 67 ஆவது இடத்தில் உள்ள 23 வயதான படோசா, மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி ஆரம்பமாகும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபனுக்காக கடந்த வாரம் 1,200 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது வீரர்கள் சென்ற மூன்று விமானங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 72 வீரர்கள் 14 நாட்கள் தங்கள் ஹோட்டல் அறையில் முழு நேரம் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு போட்டி ஏற்பாட்டாளர்களும், அவுஸ்திரேலிய அதிகாரிகளும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.