ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் அமைந்துள்ள பரபரப்பான ஒரு சந்தையில் இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களின் விளவைாக குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காயமடைந்துள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வடையக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மத்திய பாக்தாத்தில் உள்ள பாப் அல்-ஷர்கி வணிக சந்தையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் உள்ள உடைகள் மற்றும் காலணிகளின் குவியல்கள் இரத்த வெள்ளத்தினால் நிரம்பியதுடன், தப்பிப் பிழைத்தவர்கள் பீதியடைந்து ஓடினர்.

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் சுகாதார அமைச்சகம் தலைநகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அணிதிரட்டப்பட்டதாக அறிவித்தது.

தயரன் சதுக்கத்திற்கு அருகிலுள்ள சந்தையில் வெடிபொருட்களை வெடிக்கச் செய்த இரண்டு தற்கொலை குண்டுவீச்சாளர்களை பாதுகாப்புப் படையினர் பின்தொடர்ந்ததால் இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா ரசூல் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஈராக் சமீபத்திய மாதங்களில் இஸ்லாமிய அரசு குழு மற்றும் போராளி குழுக்கள் ஈராக்கில் தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.