இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரருக்கும், அணியுடன் இணைக்கப்பட்ட பெண் மருத்துவ பணியாளருக்கும் இடையிலான தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட நிர்வாகம் அணியின் முகாமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் அசந்த டி மெல்லின் அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக ஒழுங்கு விசாரணை நடத்தப்படும்.

இந்த விடயத்தில் எந்தவொரு நபருக்கும் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியின் வீரர் ஒருவர் பெண் மருத்துவ பணியாளர் ஒருவருடன் தவறாக நடந்து கொண்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந் நிலையிலேயே சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அந்தச் செய்தி அறிக்கையின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் பொருட்டு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் அசந்த டி மெல்லுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவுறத்தியுள்ளது.