(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் பரவலை அடுத்து மூடப்பபட்டிருந்த கொழும்பும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் பத்து மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது வரையில் 30 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சுகாதார வழிமுறைகளுக்கு அமையவே செயற்பட முடியும் எனவும், இரண்டு வாரகாலம் நிலைமைகளை அவதானித்து அவசியமான மாற்று நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

உலகளாவிய கொவிட் -19 வைரஸ் பரவலை அடுத்து மூடப்பட்டிருந்த இலங்கை விமானநிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனை அடுத்து  இலங்கைக்கான முதலாவது விமானமாக வை-டபிள்யூ 173 பயணிகள் விமானம் ஓமான் மஸ்கட் நகரில்  இருந்து இன்று காலை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இன்றைய தினம் குறித்த விமானத்தில் 54 பயணிகள் இலங்கைக்கு வந்ததுடன் இதில் 50பேர் இலங்கையர்கள். ஏனைய நால்வரும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுற்றுலாத்துறைக்கான மீண்டும் நாடு திறக்கப்பட்ட நிலையில்  சுற்றுலாத்துறை மீள் ஆரம்ப நிகழ்வு இன்று கொழும்பில் அமைந்துள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது, இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்ததானது,

உலககளாவிய கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த பத்து மாதங்களாக மூடப்பட்டிருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையிலும் நாட்டினை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணமே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது மீண்டும் இலங்கையுடன் கைகோர்க்க ஏனைய நாடுகள் தயாராகியுள்ளனர்.

தற்போது வரையில் 35 விமான சேவைகளை இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்ள இணங்கியுள்ளனர். எனவே மீண்டும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகவே நாம் கருதுகிறோம். இன்று சுற்றுலாத்துறை மீள ஆரம்பிக்கப்பட்டாலும் அடுத்த ஆறு அல்லது ஏழு மாதங்களில் நிலைமைகள் முழுமையாக வழமைக்கு திரும்பும் என எதிர்பார்கின்றோம்.

இந்த ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு சுமார் 2500 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரக்கூடிய விதத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனினும் இலக்கு என எதனையும் இப்போதைக்கு எம்மால் கருத முடியாது. முதலில் நாடு திறக்கப்பட வேண்டும், சுற்றுலாப்பயணிகள் வரக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும், இதன்போதும் "டிரவல்-பபிள்" திட்டத்திற்கு அமையவே சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் வர முடியும். அத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாகவேண்டும்.

அதேபோல் சுற்றுலாப்பயணிகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் மற்றும் மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் வர முடியும். வழமையாக முன்னெடுக்கும் விமான முறைமைகள் கையாளப்படுகின்றது. பயணிகள் தம்மை பதிவு செய்து கொள்வது தொடக்கம் மீண்டும் இந்த நாட்டில் இருந்து வெளியேறும் வரையில் "டிரவல்-பபிள்" திட்டத்திற்கு அமையவே சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்குள் செயற்பட முடியும். நாட்டிற்குள் 16 பல்பொருள் நிலையங்களில்  சுற்றுலாப்பயணிகள் தமக்கான நினைவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் ஒவ்வொரு நிலையமும் குறித்த சில மணி நேரங்களே திறக்கப்படும். அந்த நேரத்தில் பயணிகள் தாம் விருப்பும் நிலையங்களில் தமக்கான பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

தற்போது நாடு திறக்கப்பட்டாலும் கூட அடுத்த இரண்டு வாரங்கள் நிலைமைகள் ஆராயப்படும், சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் வருவதில் ஏற்படும் சிக்கல்கள், சுகாதார நிலைமைகள் எவ்வாறு உள்ளது. நாடு திறக்கப்படுவதால் அச்சுறுத்தல் நிலைமைகள் என்ன என்பதை அடுத்த இரண்டு வாரகாலம் அவதானித்து அவசியமாயின் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.