(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி நேற்று வியாழக்கிழமை கொழும்பில் கருப்பு கொடியேந்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. 

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாக ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு சென்று அங்கும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தினால் இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு , தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்கம் , இலங்கை பெருந்தோட்ட சேவைகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தன. ஆர்ப்பாட்டம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் வெவ்வேறு பிரதேசங்களிலுமுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்ட போது அங்கு உடனடியாக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பொலிஸாரின் வருகையைத் தொடர்ந்து காலி முகத்திடல் வீதியில் ஆர்ப்பாட்டக்கார்கள் குழுமியதோடு , அங்கு பொலிஸாருக்கும் அவர்களுக்குமிடையில் கடும் கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டன. வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாமெனவும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்லுமாறும் பொலிஸார் கடும் தொனியில் கூறிய போது இவ்வாறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

பொலிஸார் கூறியதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது , 'தொடர்ந்தும் இங்கிருந்து எமது சேவைக்கு இடையூறு விளைவித்தால் கைது செய்ய நேரிடும்.' என்று பொலிஸார் எச்சரித்தனர். 'கைதுகளுக்கு அஞ்சுபவர்கள் நாம் அல்ல. உங்கள் சேவை இது என்றால் அதனை நீங்கள் செய்யுங்கள். எங்களின் சேவை 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுப்பது. அதை நாம் செய்வோம்.' என்று ஆர்ப்பாட்டக்கார்கள் அதற்கு பதிலளித்தனர்.

நீண்ட நேர கருத்து முரண்பாடுகளின் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று , அங்கு கருப்பு கொடிகளை ஏந்தியவாறும் , 1000 ரூபாய் என எழுதப்பட்ட கருப்பு துணியை தலையிலும் கைகளிலும் கட்டியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

'1000 வாக்குறுதிகள் நினைவில் இல்லையா ? ஆட்சியாளர்களே வெட்கம் இல்லையா?' , 'அரிசி 100 : தேங்காய் 100 : சீனி : 100 , கூலியோ இன்னும் 700' , 'கோர்த்துவிடும் 1000 வேண்டாம் : அடிப்படையை ஆயிரமாக்கு ' , 'அடிப்படை 1000 இன்றி கள்ள ஒப்பந்தம் செய்யாதே' , என்ற பல வசனங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைகளில் ஏந்தியிருந்தனர். இதே கோஷங்களையும் எழுப்பினர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ கருத்து தெரிவிக்கையில், 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அடிப்படை சம்பளத்தில் 20 ரூபாவை மாத்திரம் அதிகரிப்பதந்கு கம்பனிகள் இனங்கியுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு தொழிற்சங்கள் இனக்கம் தெரிவிக்குமாயின்அது பாரிய காட்டிக் கொடுப்பாகும். வழமையைப் போன்று இம்முறையும் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்காது அவர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிரிப்பை 1000 ரூபாவாக்குமாறு நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம்.' என்றார்.

--