(நா.தனுஜா)

நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குரிய நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரலின் ஊடாக பாரிய மோசடி இடம்பெறுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கை மின்சாரசபை, சிலோன் நிலக்கரி நிறுவனம், மின்வலு சக்தி அமைச்சு ஆகியவற்றின் மீது பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மிகமுக்கிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.

மீண்டும் அதிக விலைக்கு நிலக்கரியைக் கொள்வனவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நிலக்கரி மின்னுற்பத்தி ஆலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இத்தகைய செயற்பாடு இடம்பெற்று வருவதை நாம் அறிவோம்.

புத்தளம் மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக நிலக்கரியைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வதாகக்கூறி, பல தடவைகள் முறையற்ற விதத்தில் விலைமனுக்கோரல் முன்னெடுக்கப்பட்டது. கடந்த காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோதும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தடுப்பதற்கு முற்பட்ட காரணத்தினால் எனக்கு அந்த அமைச்சுப்பதவி இல்லாமல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவ்வாறான மோசடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முறையான கொள்முதல் திட்டம் பின்பற்றப்படாமையின் விளைவாக தற்போது உடனடிக்கொள்வனவு முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனினும் ஒரு தடவையில் உடனடிக்கொள்வனவின் போது ஒரு தொன் நிலக்கரிக்குச் செலுத்திய பணத்தை விட அதிக பணம் பிறிதொரு தடவை உடனடிக்கொள்வனவின் போது செலுத்தப்படுகின்றது.

எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருளுக்கான கேள்வி வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனால் நிலக்கரி மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலை சாதாரண மட்டத்திலேயே காணப்படுகின்றது.