(செ.தேன்மொழி)

கம்பஹா பகுதியில் வீடொன்றிலிருந்து தம்பதியினர் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் தம்பதியினர் சடலமாக இருப்பதாக இன்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சியம்பலாபிட்டியகே தொன் செல்டன் அலெக்சன்ரா என்ற 60 வயதுடய நபரும் , பரகஹகொட லியனகே துஷாரி பிரியங்கிகா என்ற 50 வயதுடைய அவருடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதன்போது பெண்ணின் சடலத்தின் கழுத்து பகுதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் காயமொன்று காணப்பட்டுள்ளதுடன் , அவருடைய கணவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த இருவருக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதால் , கணவர் அவரது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் அது தொடர்பில் உறுதியாக கூறமுடியாது என்றும் , தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் மகள் கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் , சம்பவத்தின் போது அவர் வீட்டில் இல்லை என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சடலங்கள் கம்பஹா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.