(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சிடம் அனுமதி பெறாத தனியார் வைத்தியசாலைகள் பிராந்திய மற்றும் சிறு ஆய்வு கூடங்களில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகள்  தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிராந்திய மற்றும் சிறு ஆய்வு கூடங்களில் பரிசோதனையை மேற்கொண்டு தொற்று உறுதி செய்யப்படுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படாமல் மறைந்து கொள்வதாகவும் இராணுவத்தளபதி கூறினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன , இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர்  தனியார் துறையின் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூட முகாமையாளர்களுடன் நேற்று புதன்கிழமை விசேட சந்திபொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே இராணுவத்தளபதி இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தனியார் வைத்தியசாலைகள் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு வெவ்வேறு கட்டணத்தை அறவிடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கொவிட் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு தொழில்நுட்ப ரீதியாக பொருத்தப்பட்ட 30 ஆய்வு கூடங்கள் மாத்திரமே சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

பரிசோதனைகளுக்கான தற்போதைய கட்டண வரையறைகளை மக்களின் நலனுக்காக மேலும் குறைக்க முடிந்தால் அது மிகவும் சிறந்ததாகும். மாறாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது. உக்ரைனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிட்ட சில தனியார் துறை மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த சுகாதார அதிகாரிகளால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன , இந்த நடைமுறைக்கான வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறான நடைமுறைகளை நாடாமல் பரிசோதனை முறையின் நம்பகத்தன்மையை மிக உயர்ந்த மட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கான பொதுவான ஒழுங்குமுறை பொறிமுறையை அமுல்படுத்துதல், இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆடைத் தொழில் ஊழியர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வோர், அந்தந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு இதுபோன்ற நடைமுறைகளின் 100 வீதம் நம்பகத்தன்மையை ஒழுங்குபடுத்துவதற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி அவற்றை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.