(செ.தேன்மொழி)
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக  செயற்பட்டதாக கடந்த ஒன்பது நாட்களுக்குள், 1,107 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப்பிரிவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. 

இந்நிலையில்,  கடந்த ஒன்பது தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது 6,240 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 5,183 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியிருந்ததுடன் 1,107 நிறுவனங்களில் அந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இதன் போது சுகாதார விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை , இன்றுகாலை ஆறுமணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 910  நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 807 நிறுவனங்களில் மாத்திரமே முறையான சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய 103 நிறுவனங்களில் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.அதனால், இவ்வாறு சுகாதார  விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த நிறுவனங்களின் நிர்வாகப்பிரிவினருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல்மாகாணத்திற்கு வெளியில் முகக்கவசம் அணியாமை தொடர்பில் இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் 2,640 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.