(இராஜதுரை ஹஷான்)

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக மாத்திரமே வழங்கப்படுகிறது. ராஜபக்ஷர்கள் தேசிய வளங்களை ஒருபோதும் விற்க மாட்டார்கள் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், 2001 தொடக்கம் 2004 வரையான காலப்பகுதியிலும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் அரச காணிகள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. காணி மறுசீரமைப்பு சபைக்கு சொந்தமாக காணிகள் முறைக்கேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விடயம்  குறித்து காணி விவகார அமைச்சு மட்டத்தில் தற்போது விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காணி விவகாரத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் கருதினால் தகுந்த ஆதாரத்துடன் காணி விவகார அமைச்சில் முறையிடலாம். விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் கையகப்படுத்தப்பட்டுள்ள அரச காணிகள் அரசுடமையாக்கப்படும்.

கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு முனையம் தொடர்பில்  அறியாமையின்  காரணமாகவே பலர் எதிர்ப்புக்களை தெரிவிக்கிறார்கள். இதனையும் எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். கிழக்கு முனையத்தை விற்கும், குத்தகை அடிப்படையில் பிற நாட்டவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை என ஜனாதிபதி,பிரதமர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்கள் என்றார்.