(எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை மையப்படுத்தி கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு நடவடிக்கை -

பேராதனை வைத்தியசாலையின் பல் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடாத்தி, அவர்களை சிறைப்படுத்தி வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், 'தம்மிக பாணி' எனும் பெயரில் கொரோனாவுக்கான மருந்து என பாணி வகையொன்றினை பிரசித்தம் செய்த  ஆயுர்வேத வைத்தியர் என கூறப்படும் தம்மிக பண்டாரவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.


 இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பல் வைத்தியர் தரப்பினரதும், தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் தரப்பின் சிலரதும் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார், மேலதிக குற்றவியல் விசாரணைகளை தொடர்வதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

'சில நாட்களுக்கு முன்னர் பேராதனை வைத்தியசாலையின் பல் வைத்தியர் ஒருவரும் அவருக்கு நெருக்கமான சிலரும், கேகாலையில் உள்ள தம்மிக பண்டாரவின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.  கொரோனா பாணியை பெறும் நோக்கில் அவர்கள் சென்றதாக கூறப்படுகின்றது.

இதன்போது, தம்மிக பண்டார தான்  உற்பத்தி செய்த பாணி தொடர்பில்  விளக்கமளிக்கும் போது, மேற்கத்தேய வைத்தியர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.  அதனை குறித்த பல் வைத்தியர் தனது தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும், அதனை அறிந்த தம்மிக பண்டார வைத்தியரின் தொலைபேசியை பறித்து பதிவுகளை அழித்த பின்னர், வைத்தியர் மீதும் அவரது சகாக்கள் மீதும் தனது குழுவினரோடு இணைந்து தாக்குதல் நடாத்தி சிறிதுநேரம் சிறைப்பிடித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குறித்த பல் வைத்தியர், பேராதனை பொலிஸாருக்கு  முறைப்பாடளித்துள்ள நிலையில், மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் குறித்த முறைப்பாடு மீது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.