(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான கடன்வழங்கல் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருக்கிறது.

மத்திய வங்கியின் நாணயச்சபைக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மத்தியவங்கி அதன் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.5 சதவீதமாகவும் 5.5 சதவீதமாகவும் அவற்றின் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேரண்டப் பொருளாதார நிலைமைகள் மற்றும் உள்நாட்டு, உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாணயச்சபை கடந்த 2020 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த சந்தைக் கடன்வழங்கல் வீதங்களின் குறைப்பினைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்று அவசியமென்று பரிந்துரை செய்தது.

2020 நவம்பரில் அறிவிக்கப்பட்டவாறு, வங்கித்தொழில் சமூகத்தின் ஆலோசனையுடன் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான கடன்வழங்கல் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.