(எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை கடற்படையினரின் கைதிலிருந்து தப்பிக்க, கடற்படை படகை மோதி சேதப்படுத்தி மிக ஆபத்தான முறையில் படகை செலுத்த முற்பட்ட போது சமனிலை குலைந்து நீரில் மூழ்கியதாக கூறப்பட்ட இந்திய மீனவப் படகு நேற்று மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை வரை கடற்படையினர் முன்னெடுத்த விஷேட மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் மூழ்கிய படகையும்  இரு மீனவர்களின் சடலங்களையும் மீட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன்  இந்திக டி சில்வா தெரிவித்தார். இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த கடற்பரப்பில் தேடுதல்கள்  மற்றும் மீட்பு நடவடிக்கையில்  கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், மீட்கப்பட்ட இரு சடலங்களையும் நிலப் பகுதிக்கு எடுத்து வந்து பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்...

சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய படகு கடற்படையினரின்  எச்சரிக்கையை  மீறி தப்பிச் செல்ல, மிக ஆவேசமாக, ஆபத்தான முறையில் கடற்படையின்  படகுடன் மோதச் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் போது சமநிலையை இழந்து நீரில் மூழ்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.


குறித்த இந்திய மீனவப் படகானது சட்ட விரோத மீன்மீடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நேரம்,  கடற்படையின் படகை மீறிச் செல்ல முயன்ற நிலையில், மிக ஆபத்தான படகு செலுத்தும் முறைமைகளை சட்ட விரோத மீனவர்கள் கையாண்டதாக கடற்படையினர் கூறினர். இதன்போதே, கடற்படையினரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் குறித்த சட்ட விரோத மீனவப் படகு, கடற்படையின் படகுடன் மோதச் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால், அப்படகு சமனிலை குலைந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் கடற்படையினர் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கடற்படையின் சுழியோடிகளுடனான  கப்பலும் படகொன்றும் குறித்த கடற்பரப்பில் தேடுதலில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே நேற்று மாலை இரு மீனவர்களின் சடலங்களும், மூழ்கிய படகும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும், காணாமல் போயுள்ள ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.