மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலருக்கு கடந்த வாரம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டது.

குறித்த பரிசோதனைகளின் போது மன்னார் நகர பகுதி மற்றும் பஸார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரில் அதிகளவானோருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார துறையினர் இணைந்து இது வரை பிரதான கடை தொகுதிகளில் சுமார் 15 வர்த்தக நிலையங்களை மூடியுள்ளதுடன் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் சுயதனிமைப்படுத்தியுள்ளனர். 

அதே நேரத்தில் அத்தியவசிய தேவைகள் இன்றி நகர் பகுதிக்குள் வருவதையோ அல்லது கூட்டம் கூடுவதையோ தவிர்க்குமாறு பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் நேற்று  செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.