கொரோனா தொற்றினால்  உயிரிழப்போர் விடயத்தைப் பொறுத்தவரையில், சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி ஒவ்வொருவரும் அவர்களது நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதனூடாக அவர்களின் உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கை நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்ததுடன், அதனால் ஏற்பட்ட சர்ச்சை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய பின்னணியின் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையினால் 1955 ஆம் ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 18 ஆவது சரத்தின்படி ஒவ்வொருவரும் தமது மதம் அல்லது நம்பிக்கையினைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உள்ளது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச ரீதியில் பல்வேறு சவால்களைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும் அது பிறரது நம்பிக்கைக்கு மதிப்பளித்தல் மற்றும் இரக்கம் காட்டுதல் ஆகிய குணவியல்புகளில் தாக்கத்தையோ இழப்பையோ ஏற்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருக்கும் அமெரிக்கத்தூதுவர்,

இந்த வைரஸ் தொற்றின் விளைவாக தமது அன்பிற்குரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.