மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கறுவாக்கேணியில் வீதியோரத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலமொன்றை இன்று மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 

கறுவாக்கேணியைச் சேர்ந்த வே.தங்கராசா வயது (58) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை வீட்டிற்கு சென்று மனைவியிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபா பணத்தில் கடன் செலுத்த வேண்டுமென கூறி 95 ஆயிரம் ரூபாவை பெற்றுச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், தமது வீட்டின் முன் வீதியில் ஓரத்தில் தேங்கி நின்ற வெள்ள நீரில் முகம் குப்பற கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 

திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில். சடலம் உடற் கூற்று ஆய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.