(எம்.மனோசித்ரா)
இளைஞர்களை ஒழுக்கமான பாதையில் வழிநடத்துவதற்கு இராணுவ பயிற்சி அத்தியாவசியமானதல்ல. பாடசாலைகளிலுள்ள தலைமைத்துவ பயிற்சிகள் உள்ளிட்டவையே போதுமானவை. எனவே அரசியல் நிரல்களுக்கு இளம் சந்ததியினரை இரையாக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாகார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இறப்பர் முத்திரைகளைப் போன்றாகியுள்ளனர். அமைச்சரவையில் கூட அங்கத்துவம் வகிக்காதவர்கள் அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரமுடையவர்களைப் போன்று செயற்படுகிறார்கள். நாட்டில் நடக்கின்ற பல குற்றச் செயல்களுக்கு இளைஞர்களே காரணம் என்றும் அதனால் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சியளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இளைஞர்களை ஒழுக்கமான முறையில் வழிநடத்துவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. எனவே இவ்வாறான பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீதம் வாய்ப்பை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருக்கிறது. இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்காமல், எதைக் கூறினாலும் சரியென்று கூறும் சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இது அடிப்படையற்ற செயற்பாடாகும். அரசியல் நிரல்களுக்கு இளம் சந்ததியினரை இரையாக்கக் கூடாது.