(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
சாதாரண பொது மகனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் நிலைநாட்டுவதில்லை. நாட்டில் ஏகாதிபத்திய ஆட்சியே இடம்பெறுகின்றது. அத்துடன் பொருட்களின் விலை குறைப்புக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் எந்தவொரு பொருளின் விலையும் குறையவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.


மேலும், நாட்டு மக்கள் வாழ்க்கைச்செலவை சமாளித்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. பொருட்களின் விலையை குறைப்பதாக தெரிவித்து அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுமுதல் வர்த்தமானி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. ஆனால் பொருட்களின் விலை மட்டும் குறைவடையவில்லை. 

சாதாரண பொது மகன் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால், குறித்த நபரையும் அவரது குடும்பத்தையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புகின்றனர். அந்த பிரதேசம் முற்றாக முடக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தலில் இருந்து வரும்போது அந்த நபருக்கு எந்த வருமானமும் இல்லை. வேலை செய்யும் இடத்தில் அவருக்கு சம்பளமும் இல்லை. 

ஆனால், இன்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. டயர் கம்பனி தொழிற்சாலை திறப்பு நிகழ்வில் பியல் நிஷாந்தவுடன் ஜனாதிபதி இருந்தார். நாமல் ராஜபக்ஷ் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இருந்தனர். தற்போது இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்களா என கேட்கின்றேன்.