எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த டொனால்ட் ட்ரம்பின் பிரியாவிடை உரை

20 Jan, 2021 | 04:26 PM
image

உலகளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்புக்களையும் பாரிய சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்த விடயமாக அமெரிக்காவின்  46 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவான ஜோ பைடனின் பதவியேற்பும் 45 ஆவது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் பிரியாவிடையும் மாறியிருந்தது. 

2021 ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்காவின் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் உலகலாவிய ரீதியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ டைபன் பதவியேற்றுக்கொள்ளும் தினத்தில் அமெரிக்காவில் வன்முறைகள் தலையெடுக்குமா? டொனால்ட் ட்ரம்பின் பிரியாவிடை உரை எத்தகையதாக அமையும் என்ற பல கேள்விகள் பொதுவானவையாகக் காணப்பட்டன. 

இவ்வாறானதொரு பின்னணியில், அண்மைக்காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்த ட்ரம்ப் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட பிரியாவிடை உரையை நிகழ்த்தி, ஜனநாயக முறைப்படி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியிருக்கிறார் என்றே கூறவேண்டியுள்ளது.

'அமெரிக்காவின் ஜனாதிபதி' என்ற உலகிலேயே மிகவும் பலம்வாய்ந்த பதவியை வகித்து விடைபெறும் டொனால்ட் ட்ரம்பின் பிரியாவிடை உரை பின்வருமாறு அமைந்தது:

நான்கு வருடங்களுக்கு முன்னர் எமது அரசாங்கத்தின் ஊடாக நாட்டை மேன்மைப்படுத்தும் நோக்கில் தேசிய ரீதியிலான முனைப்பை உருவாக்கினோம். அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஏற்புடைய வகையில் வலுவான அமெரிக்காவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

அமெரிக்காவின்  45 ஆவது ஜனாதிபதியாக எனது பதவிக்காலத்தை நிறைவுசெய்யும் தறுவாயில், இதுவரை காலமும் நாமனைவரும் ஒன்றிணைந்து அடைந்துகொண்டவையை நினைத்து பெருமிதத்துடன் உங்கள் முன் நிற்கின்றேன். நாம் எதைச் செய்வதற்காக ஆட்சிக்கு வந்தோமோ அதனைச் செய்து முடித்திருக்கின்றோம். அதற்கு மேலதிகமாகவும் பலவற்றைச் செய்திருக்கின்றோம்.

இவ்வாரம் அமெரிக்காவைப் புதியதொரு நிர்வாகத்திடம் கையளிக்கும் நிலையில், அவர்கள் அமெரிக்காவை பாதுகாப்பாகவும் சுபீட்சமாகவும் பேணுவதற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

இந்தத் தருணத்தில் நான் கடந்து வந்த பாதையில் இடம்பெற்ற முக்கியமான சில மனிதர்களுக்கு நன்றிகூற விரும்புகின்றேன். அந்தவகையில் இந்தப் பயணத்தில் எனக்குக் காண்பித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் எமது நாட்டின் முதற்பெண்மணி மெலானியாவிற்கு நன்றி கூறுகின்றேன். அதேபோன்று எனது மகள் இவான்கா, மருமகன் உள்ளிட்டோருக்கும் நன்றி கூறுகின்றேன். நீங்கள் எனது உலகத்தை முழுமையான அன்பாலும் குதூகலத்தினாலும் நிறைத்திருக்கிறீர்கள்.

மேலும் எனது உப ஜனாதிபதி, செயலாளர், வெள்ளை மாளிகையின் அர்ப்பணிப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் அமெரிக்காவை முன்னிறுத்திப் போராடுவதற்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அனைத்து நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிக்கின்றேன்.

மிகமுக்கியமான அமெரிக்க மக்களுக்கு எனது நன்றிகள். உங்களது ஜனாதிபதி என்பது வர்ணிப்புக்களுக்கு அப்பாற்பட்ட மிகப்பெரிய கௌரவமாகும். அனைத்து அமெரிக்கர்களும், அமெரிக்காவை வெற்றிகரமான நாடாக மாற்றியமைப்பதற்கு விரும்பும் அதேவேளை, அமைதியையும் சமாதானத்தையும் வரவேற்போராவர். எனினும் அரசியல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். ஆகவே ஒரு பொதுவான இலக்கிற்கான முன்னரை விடவும் நாமனைவரும் ஒன்றுபட வேண்டும்.

நான்கு வருடங்களுக் முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற விரும்பும் ஒரு வெளியாளாகவே நான் வாஷிங்கடனுக்குள் வந்தேன். இயலுமை இருப்பினும் கூட அமெரிக்கா எதிர்கொண்டிருக்கும் சவால்களை நான் அறிந்திருந்தேன். எனவே அமெரிக்காவை முதன்மைப்படுத்துவதற்காக நான் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டேன்.

அமெரிக்கா பலவற்றை எனக்குக் கொடுத்திருக்கிறது. எனவே நானும் அமெரிக்காவிற்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடமையிருக்கிறது. அதன்படி கடுமையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் ஊடாக அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக நாம் மிகவும் பலம்வாய்ந்த ஓர் அரசியல் இயக்கத்தை உருவாக்கினோம். அதுமாத்திரமன்றி உலக வரலாற்றிலேயே மிகச்சிறந்த பொருளாதாரத்தையும் நாம் கட்டியெழுப்பினோம். இவையனைத்தும் அமெரிக்காவை முதன்மைப்படுத்துவதையும் அமெரிக்காவை மீண்டும் பலம்வாய்ந்த நாடாக மாற்றுவதையும் நோக்காகக் கொண்டவையே ஆகும்.

எமது கொள்கை என்பது வலதுசாரியோ அல்லது இடதுசாரியோ அல்ல. மாறாக குடியரசு, ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு எது சிறந்தது என்பவற்றை மையப்படுத்தியதே ஆகும். சாத்தியமானவை என்று பலரும் நினைத்திருக்காதவற்றைக்கூட நாம் அமெரிக்க மக்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் அடைந்தோம்.

வரி விலக்கு, உடைந்துபோயிருந்த வர்த்தகக் கட்டமைப்புக்களை மீளக் கட்டியெழுப்பியமை, தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தை, சீனாவுடனான புதிய ஒப்பந்தம் உள்ளடங்கலாக பலவற்றை நாம் முன்னெடுத்திருந்த போது தான் முழு உலகமுமே 'சீன வைரஸின்' தாக்கத்திற்குள்ளானது. நாம் வேறொரு பாதையில் செல்லவேண்டிய நிர்பந்தத்தை அந்த வைரஸ் ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த உலகமுமே இந்த வைரஸினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. எனினும் நாம் ஏற்கனவே கட்டியெழுப்பிய அசாத்திய பொருளாதாரத்தினால் அதனை எதிர்கொள்வதற்கான இயலுமையை அமெரிக்கா கொண்டிருந்தது. இவற்றுக்கு மத்தியிலும் கூட உலகிலேயே எண்ணெய் மற்றும் இயற்கைவாயுவின் முதற்தர உற்பத்தியாளராகவும் அமெரிக்கா எழுச்சியடைந்தது.

அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்கினோம். அமெரிக்கர்களின் கனவுகளை நனவாக்கினோம். பெருமளவானோரை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்தோம். அமெரிக்காவின் உற்பத்திக் கைத்தொழிலை மீட்சிபெறச்செய்ததுடன் பெரும் எண்ணிக்கையான தொழிற்சாலைகளை நிறுவினோம்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் மக்கள் பாரிய தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த சூழ்நிலையில் விரைவாக இரண்டு தடுப்புமருந்துகளைக் கண்டுபிடித்தோம். அனைவரும் அதனைச் செய்யமுடியாது என்றே கூறினார்கள். எனினும் நாம் அதைச் செய்து காண்பித்தோம். பின்னர் அவர்கள் அதை 'மெடிக்கல் மிராக்கிள்' என்றார்கள். பிறிதொரு நிர்வாகத்திற்கு இத்தகைய தடுப்புமருந்தைக் கண்டுபிடிப்பதற்கு 5 அல்லது 10 வருடங்கள் ஆகலாம் எனினும் நாம் வெறுமனே 9 மாதகாலத்திற்குள் அதனைச் செய்தோம்.

ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரமும் வைரஸ் பரவலினால் பாரிய தாக்கத்திற்குள்ளான வேளையில், அதிலிருந்து மிகவேகமாக மீட்சி பெறுவதற்கான பொருளாதாரத் திட்டத்தை நாம் உருவாக்கினோம். அதுபோல் மிகவும் வலுவான எல்லைப்பாதுகாப்புக் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தினோம். அத்தகைய எல்லைப்பாதுகாப்பை உருவாக்கிய பெருமையுடன் நாட்டை மற்றொரு புதிய நிர்வாகத்திடம் கையளிக்கின்றோம். நாட்டின் இராணுவத்தையும் மிகவும் பலமானதாகக் கட்டியெழுப்பினோம்.

கடந்த தசாப்தத்தில் 'புதிய போர்களுக்கு அனுமதியில்லை' என்ற கொள்கையை உருவாக்கிய முதலாவது ஜனாதிபதி நான் என்ற அடிப்படையில் பெருமைகொள்கிறேன். விமர்சனங்களுக்கு உள்ளாகாத வகையிலான மிகவும் இலகுவான பாதையை நான் தெரிவு செய்யவில்லை. மாறாக, கடினமான பாதையையே தெரிவுசெய்தேன். நெருக்கடிகளை எதிர்கொண்டேன். அமெரிக்கர்களின் தேவைகளே எனது முன்னுரிமைக்குரிய விடயமாகும். அனைவரையும் சமத்துவமாக நடத்தும் அதேவேளை, அனைவரினதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதே எனது நோக்கமாகும்.

நான் இப்போது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகின்றேன். ஒரு நாடு அதன் வரலாறு மற்றும் இயலுமைகளில் நம்பிக்கையை இழக்கும் பட்சத்தில் அதனால் மிகநீண்ட தூரம் செல்ல முடியாது. நாமனைவரும் பொதுவாகக் கொண்டிருக்கும் வளங்கள் மற்றும் திறன்களில் கவனம் செலுத்தவேண்டும். அத்தோடு கருத்துச்சுதந்திரம் மற்றும் பகிரங்க விவாதம் ஆகியவற்றில் நான் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். அதனைத் தடுப்பதென்பது எமது நாட்டின் மரபுகளுக்கு முரணானதாகும். உலக வரலாற்றில் அமெரிக்கா மிகச்சிறந்த ஒரு நாடாகவே பதிவாகியிருக்கிறது. இது எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் விதைக்கும் ஒரு நாடாகும். இதனை நாம் பாதுகாக்க வேண்டும். கடந்த நான்கு வருடகாலங்களில் நாம் அதனைச் செய்தோம். நான் உங்களுக்காகவும் உங்களது குடும்பங்களுக்காகவும் எனது நாட்டிற்காகவும் போராடியிருக்கிறேன். எமது மக்களுக்கு இன்னமும் நன்மைகள் வந்துசேரவிருக்கிறது என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் நான் வெள்ளை மாளிகையை விட்டுச்செல்கின்றேன். அமெரிக்காவிற்கும் அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்துக்கள் என்று தனது உரையை ட்ரம்ப் நிறைவுசெய்தார்.

உண்மையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டிற்குள் பெருமளவான மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறிருப்பினும் தனது நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நகர்வுகளை ட்ரம்ப் அவரது உரையிலே மேற்கோள் காட்டியிருக்கிறார். 

அதுமாத்திரமன்றி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மிகவும் இலகுவான பாதையை தான் தெரிவுசெய்யவில்லை என்றும், அனைத்து சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்கும் வகையிலான போராட்டம் நிறைந்த கடினமான பாதையையே தான் தெரிவு செய்ததாகவும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. 

கடந்த காலங்களில் அவர்மீது முன்வைக்கப்பட்ட பெருமளவான விமர்சனங்களுக்குப் பதிலாக அவர் இதனைக் கூறுகிறார் என்றே கருதவேண்டியிருக்கிறது. இந்நிலையில் 46 ஆவது ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உபஜனாதிபதி கமலா ஹரிஸ் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய நகர்வுகள் எத்தகையதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் வலுவடைந்திருக்கின்றன. கடந்த நான்கு வருடங்களைப் போன்று தான் அமையுமா அல்லது புதிய கொள்கைகள், புதிய அணுகுமுறைகளுடன் அமையுமா என்பதனை நாமும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

- நா.தனுஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13