இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இத் தொடரில் இலங்கை அணிக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட 22 வீரர்களில் திமுத் கருணாரத்ன, குசல் மெண்டீஸ், மினோட் பானுக, லஹிரு குமார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளன்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடுகையில் திமுத் கருணாரத்னவின் பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அது மாத்திரமன்றி தொடை எலும்பு காயம் காரணமாகவும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை அவர் தவறவிட்டார்.  இந்த சூழ்நிலையில், அணியை வழிநடத்தும் பொறுப்பு தினேஷ் சந்திமலுக்கு வழங்கப்பட்டது. 

இரண்டாவது போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் முழுமையாக குணமடையாததன் காரணமாக இப் போட்டியிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தினேஷ் சந்திமால் தொடர்ந்தும் அணியை வழிநடத்துவார்.

இந்த வீரர்கள் வெளியேறியதன் மூலம், இரண்டாவது டெஸ்டுக்கான இலங்கை அணிக் குழாமில் எஞ்சிய வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக காணப்படுகிறது.

விடுவிக்கப்பட்ட ஐந்து வீரர்களும் மேலதிக பயிற்சிக்காக இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயல்திறன் மையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிவர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.