ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் பணிபுரிந்து வருபவர்கள் அனைவரும் பெரும் வரவேற்புடன் அழைத்து வரப்பட்டனர். ஆனால் தற்போது வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், அவர்களை அழைத்து வருவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்த அக்கறையும் கிடையாது. 

எனினும் சுற்றுலாத்துறையை முன்னேற்றி, அதனூடாக பெருந்தொகையான வருமானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உக்ரேன் நாட்டவர்களை அழைத்து வருகின்றனர். இவர்களினால் நாட்டுக்குள் வைரஸ் பரவலடையும் வாய்ப்பு மட்டுமன்றி எமது கலாசாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

 அது தொடர்பில் அக்கறை செலுத்தாமல், சுற்றுலாத்துறை ஊடாக 42 கோடி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெருமைக் கொள்கின்றார்கள் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல குற்றஞ்சாட்டினார்.

மேலும், யுத்தத்தை முடித்த ஒருவரினால் , நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வுக்கான முடியும் என்றே  சிலர் எண்ணியிருந்தனர். ஆனால் ஜனாதிபதியின் செயற்பாடு அந்த எண்ணத்தை பொய்யாக்கியுள்ளது. ' கிராமத்துடன் உரையாடல்' என்று கூறிக் கொண்டு ஜனாதிபதி பல கிராமங்களுக்கு சென்று வருகின்றார். இந்த இடங்களுக்கு சென்று அவர் கூறுவது என்ன? தான் கூறுவதுதான் சுற்று நிரூபமாக வெளிவரும் என்று கூறியிருந்தார்.

 இதேவேளை அண்மையில் , பாராளமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இது நாட்டின் ஜனாதிபதி ஒருவருக்கு பொறுத்தமான பேச்சு கிடையாது. இதனை நாம் கண்டிப்பதுடன் , எமது அதிருப்தியையும் ஜனாதிபதிக்கு தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.