(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2,500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் நாடளாவிய ரீதியில் பல கிராம சேவகர் பிரிவுகள், வீதிகள், குடியிருப்பு தொகுதிகள், தோட்டங்கள் ஆகியவை மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளையும், சுகாதார ஒழுக்கவிதிகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மேல்மாகாணத்தை போன்று நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் இத்தகைய சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுவருகின்றன. 

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று புதன்கிழமை காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். 

அத்தோடு, மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல்  சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,050 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் மேல்மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களை இலக்கு வைத்தும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.  இந்த செயற்பாடுகளுக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.