வடக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுமார்  12 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.

இந் நிலையில் அவர்களை காப்பாற்ற சீனாவின் 16 தொழில்முறை மீட்புக் குழுக்கள் மற்றும் பல மருத்துவ பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் கிழக்கு கடற்கரை நகரமான யந்தாய் புறநகரில் உள்ள ஹுஷன் தங்க சுரங்கத்திலேயே கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 22 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவாரம் கழித்து அவர்களுள் 12 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மீட்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

செவ்வாய்க்கிழமை தப்பிப்பிழைத்தவர்களை மீட்புப் படையினர் கண்டுபிடித்து, நிலத்தடியில் வழங்கப்பட்ட நீர்ப்புகா தொலைபேசி மூலம் அவர்களிடம் உரையாடியுள்ளதாக மாகாண செய்தித்தளான கிலு டெய்லி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அதிர்ச்சி நிபுணர்கள் மற்றும் உளவியலாளர்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் காத்திருப்புடன் உள்ளதாக மருத்துவ மீட்புக் குழுத் தலைவர் சாங் சிச்செங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சுரங்க விபத்துக்கள் சீனாவில் பொதுவானவை, அங்கு தொழில்துறையில் மோசமான பாதுகாப்பு பதிவு உள்ளது மற்றும் விதிமுறைகள் பெரும்பாலும் பலவீனமாக செயல்படுத்தப்படுகின்றன.

டிசம்பர் மாதம், தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் 23 தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கி இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.