அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் நான்கு இலட்சம் உயிரிழப்புகளும், வேலையின்மை பிரச்சினைகளும் அதிகரித்துள்ள இந்த இக்கட்டான தருணத்திலேயே ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு தினத்திற்கு முன்னதாக செவ்வாயன்று வொஷிங்டனுக்கு ரயில் ஒன்றில் செல்ல பைடன் திட்டமிட்டிருந்தார். 

ஆனால் அமெரிக்க கேபிட்டலில் இரு வாரங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக தனது திட்டத்தை பைடன் கைவிட்டார்.

அதற்கு பதிலாக அவர் தலைநகருக்கு வெளியிலுள்ள இராணுவ முகாமிற்கள் மிகவும் சூட்சுமமான முறையில்  நுழைந்து, பின்னர்  செவ்வாய்கிழமை நண்பகல் வேளையில் சுமார் 25,000 படைவீரர்களால் கண்காணிக்கப்படுகின்றதும், உயரமான மதில்சுவரால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும் வெள்ளை மாளிகை அமைந்திருக்கின்றதுமான தலைநகரத்திற்குள் மோட்டார் வாகனத்தின் ஊடாக நுழைந்தார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்க கேபிட்டல் கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பதவியேற்பார்கள். 

அவர்கள் பதவியேற்ற பின்னர், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும், சிறப்பாக மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவதற்கும், தேசத்தை ஒன்றிணைப்பதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கமான தனது இலக்கினை முன்வைக்கும் தொடக்க உரையை நிகழ்த்துவார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், முதல் பெண்மணி, துணை ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் இரண்டாவது ஜென்டில்மேன் ஆகியோர் இராணுவ உறுப்பினர்களுடன் பாஸ் இன் ரிவியூவில் (Pass in Review)பங்கேற்பார்கள். 

பாஸ் இன் ரிவியூஸ் என்பது அமெரிக்காவின் ஒரு நீண்டகால இராணுவ பாரம்பரியமாகும். இது ஒரு புதிய தளபதிக்கு அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதை பிரதிபலிக்கிறது.

பதவியேற்பு நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜோர்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும் அவர்களது பாரியாரும் இணைந்து கொள்வார்கள்.

மத்திய வொஷிங்டன் ஒரு ஆயுதக் கோட்டையாகும். இது ரேஸர் கம்பியால் கட்டப்பட்டிருக்கிறது மற்றும் புதன்கிழமை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்னதாக அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் 25,000 தேசிய காவல்படையினரால் சூழப்பட்டுள்ளது.

பதவியில் இருந்த வெளியேறும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஏமாற்றப்பட்டார் என்ற நம்பிக்கையை வைத்திருக்கும் சில எதிர்ப்பாளர்கள் பைடனின் பதவியேற்பு விழா மற்றும் தொடக்க நிகழ்வுகளை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்றும் பரவலாக அச்சமெழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.