(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  கூறியுள்ளமையே இந்த நாட்டில் திட்டமிட்ட  இனப்படுகொலை  இடம்பெற்றுள்ளது என்பதற்கு இருக்கும் மிக முக்கிய வாக்குமூலமாகும். இதனை பிரதான சாட்சியாக வைத்து சர்வதேச  மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.

 தமிழர்கள் இனியும் இந்த நாட்டின் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு -கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

மேலும், முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் அவர்களுடைய  அடிப்படை உரிமை கொண்ட மண்ணில், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையில் இராணுவம் சூழ, இராணுவக் கொடிகள் நாட்டப்பட்டு புத்த பகவானின் சிலையும் வைக்கப்பட்டதுடன், அகழ்வாராச்சி என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை சூறையாடும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை தமிழர்கள் வாழ்ந்த இடமாகும். இன்று இந்த இடங்கள் அழிந்து போயுள்ளன, இப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக கல்யாணிபுரம், படலைக்கல்லு என்ற இரண்டு ஆதிக் கிராமங்களில் தமிழர்கள் வாழ்ந்தனர். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. இந்த இடங்களில் அகழ்வாராச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட கூடாது என நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்ற கட்டளையை மீறி அமைச்சர் ஆரவாரரங்களுடன் சென்று சட்டத்தை மீறுவது மூலம் இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றது என்றார். 

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு நீதி, சிங்கள தலைவர்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் நிலங்களை பறிப்பதற்கும், தமிழர்களுக்கும் இன்னொரு வகையான நீதியா? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொன்றவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மிருசிவில் படுகொலையில் ஈடுபட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எமது விடயத்தில் நீதிமன்றங்கள் எங்கே போனது, எமது விடயத்தில் நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன. இந்த நாட்டில் தனியே பெளத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே நீதி வழங்கும் மன்றங்கள் இயங்குகின்றன.

ஜனாதிபதி அண்மையில் கிழக்கில் ஒரு இடத்தில் குறிப்பிட்டார். பிரபாகரனை சுட்டு இழுத்து வந்ததாக அவரே ஒரு பெரும் சாட்சியமாக குறிப்பிட்டுளார். இந்நிலையில் உலக நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகளிடம் ஒன்றை கேட்கிறேன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தானே யுத்தத்தை வென்றேன், நானே பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் என கூறி சாட்சியாக உள்ள நிலையில், இந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேறு என்ன சாட்சியங்கள் வேண்டியுள்ளதென கேட்கின்றேன். இந்த நாட்டில் இனியும் தமிழர்கள் சிங்களவர்கள் இணைந்து வாழ முடியாது என்பதற்கு அவரே சாட்சியாக உள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசினால் அவரை கொலை செய்வேன் என்கிறார். 

இவ்வாறான ஜனாதிபதியின் கீழ் இந்த நாட்டில் நீதி கிடைக்குமா? சிங்களவர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ முடியுமா? எனவே இந்த நாட்டில் இனியும் நாம் வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராக வேண்டும். உலக நாடுகளின் ஆதரவுடன் இது இடம்பெற வேண்டும். இந்த நாடு இப்போதும் அபாயகரமான சூழலுக்கு நகர்ந்து செல்கின்றது. முஸ்லிம்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் அடிப்படை ஜனாஸா உரிமையை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, வன்முறைகள் என மோசமாக இடம்பெற்று வருகின்றது என்றார்.