பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களுக்கு மத்தியில் அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அந்நாட்டு மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையகம் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் மருந்து ஒழங்குபடுத்தல் ஆணையகம் அவசரமாக கூடி இந்த முடிவினை எடுத்ததோடு, இணைய வாயிலாக அதற்கான கையொப்பத்தையும் இட்டுக்கொண்டது. பாகிஸ்தானில் இரண்டு தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் சினோபார்முக்கு அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை மதிப்பீடு செய்த பின்னர் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் முதலில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் தொடர்பான மேலதிக தரவுகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு காலாண்டிலும் அங்கீகாரம் மதிப்பாய்வு செய்யப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தயாரித்த தடுப்பூசியை பாகிஸ்தான் தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றது.

இதேவேளை, சினோபார்ம் தடுப்பூசி அதன் பாதுகாப்பு மற்றும் நியாயமான விலை ஆகியவற்றின் அடிப்படையில்  அமைச்சரவையால் அதனைக் கொள்முதல் செய்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சவுத்ரி ஃபவாத் உசேன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாக்கிஸ்தானில் ஒரே நாளில் ஆயிரத்து ,920 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் 46 இறப்புகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இதுவரையில் 521,211 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதுவரையில், 10,997 உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.