பிக் பொஸ் சீசன் 4 நிகழ்வின் வெற்றியாளரான நடிகர் ஆரி அர்ஜுனன் பெயரிடப்படாத படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிக் பொஸ் சீசன் 4 போட்டியில் பங்குபற்றி வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்ட நடிகர் ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

இந்த படத்தில் முதன் முறையாக காக்கி சட்டை அணிந்து கம்பீரமான பொலிஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கும் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக நடிகை வித்யா பிரதீப் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கொமடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான முனிஸ்காந்த் நடிக்கிறார். அறிமுக இசை அமைப்பாளர் ஸ்டெர்லிங் நித்தியா இப்படத்திற்கு இசையமைக்க, புதுமுக ஒளிப்பதிவாளரான பி வி கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார்.

சவுரியா புரொடக்சன்ஸ், சுப்பையா மற்றும் அபின் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முன்னணி இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ், மூத்த இயக்குனரும், நடிகருமான ஆர் சுந்தர் ராஜன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

பிக் பொஸ் சீசன் 4 போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ரசிகர்களிடையே தற்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது என்பதும், நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்பில் 'பகவான்', 'அலேகா', 'எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.