புனானை கொவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் புனானை சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 43 வயதான ஷெல்டன் பிரேமரத்ன என்ற நோயாளியே தப்பிச் சென்றவர் ஆவார்.

குறித்த நபர் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அவர் கொலன்னாவை, மீதொட்டமுல்ல பகுதியில் அமைந்துள்ள பேக்கரியொன்றில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது.

இந் நிலையிலேயே அவர் வைத்திய சிகிச்சைகளுக்கான வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானை சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந் நிலையில் பொது மக்களின் உதவியுடன் தப்பிச் சென்றவரை கண்டுபிடிக்க பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த நிலையில் அவர் இன்றைய தினம் எஹெலியகொட, பல்பிட்டிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.