டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்று விட்டால் கூட இந்தியா அந்தளவுக்கு கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது.

சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தால் அது வெற்றி மட்டும் தான் ஆனால் இந்த பிரிஸ்பேன் சம்பவம் ஒரு மாபெரும் கிரிக்கெட் சரித்திரம் மட்டும் கிடையாது இந்திய அணியைப் பார்த்து ஏளனமாகப் பேசித்திரிந்த அத்தனை வாய்களையும் அடக்கி விட்ட வரலாறு.

32 வருடமாக பிரிஸ்பேனில் அவுஸ்ரேலியா தோற்றதே கிடையாது. இருந்திட்டு போகட்டும், ஆனால் இனிமேல் இந்தியா பிரிஸ்பேன் வந்தால் அவுஸ்ரேலியன் கண்ணில் மரண பயம் தெரிய வேண்டும்.

நாம திருப்பி அடிக்கலனா அவனுக நம்மல துரத்தி அடிச்சிட்டே இருப்பானுகள், அடிக்கிறவனுக்கு திரும்ப அடிக்கனும், மொத்தமா அடங்கிற மாதிரி அடிக்கனும் என்று பாடத்தை அமைதியாக கற்றுத்தந்துள்ளது இந்த ரகானே தலைமையிலான இளம் இந்தியன் படை.

சிங்கத்தின் குகையில் ஆப்பிட்டு விட்ட மான் போலத்தான் இந்திய அணி பிரிஸ்பேனில் களமிறங்கியது என்றதாகத் தான் கருதினோம் ஆனால் அந்த சிங்கத்தையே வேட்டையாடிப் போட்ட காட்சியை பார்த்து உலகமே அதிர்ந்து போனது, வேட்டையாடியது அனைத்துமே இளம் மான் குட்டிகள் என்பது தான் இங்கு மிகப்பெரிய சுவாரஸ்யமே

தலைவர் விராட் நாடு திரும்பி நாட்கள் கடந்து விட்டது, அனுபவ பந்துவீச்சாளர் பும்ரா ஆடவில்லை, நடுத்தர வரிசயைில் கே.எல் ராகுல் இல்லாமல் ஆட வேண்டிய சூழ்நிலை, ஸ்மித்தை ஆட்டம் காட்டிய அஸ்வினுக்கும் உபாதை.

அத்தனையும் இறுதியில், இளம் வீரர்கள் சாதிக்க எழுதி வைத்த நாளாக மாறியது.

ஒரே நாளில் 300+ என்ற இலக்கை அடைய வேண்டிய கட்டாயம். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹஸ்ல்வூட் என்று அசுர வேகங்களை சமாளிப்பது மட்டுமல்லாது ஒரு வன் டே போட்டியைப் போலவும் ஆட வேண்டிய கட்டாயம்

ஆப்னிங் ஆட வந்த அனுபவ வீரன் ரோகித் சர்மாவை ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் அனுப்பியது கம்மின்ஸின் அனுபவப் பந்துவீச்சு.

21 வயதேயான வொஷிங்டன் சுந்தர், நம்ம நடைமுறை உலக இன்ஸ்பிரேசன் நடராஜன் அறிமுக டெஸ்டை அசத்தலாக ஆரம்பிக்க, தாகூர் வழங்கிய முதலாவது இன்னிங்ஸ் பேட்டிங் என்பன இங்கு வெற்றிக்கு போட்ட விதைகளாக இருந்தது.

மரமாக முளைத்த சுப்மன் ஹில் தன் பங்கை சிறப்பாக செய்ய அமைதியாக மறு கரையில் வெளுத்து வாங்கினார் ரிஷாத் பந்த்.

இந்த வெற்றி நமக்கு வந்தால் சந்தோசம், ஆம் வந்து விட்டது ஆனால் இதற்கு முதல் ஒன்றைப் பற்றி யோசித்திருக்க வேண்டும், அதாவது

தோற்றுவிடாமல் ஒரு அரணை கட்ட வேண்டும் என்பது தேவை, தன்னை அழித்து அழகாக செய்து காட்டினான் புஜாரா, அடி வேண்டாத இடமே கிடையாது.

புஜாராவை நிலை குலைய வைக்க கம்மின்ஸ் காட்டாத திருகு தாலங்களே கிடையாது. அவருக்கு தெரியாது அந்த சுவரில் பந்து பட்டால் அழிவது பந்து மட்டும் தான் என்று.

இத்தனைக்கும் மேலாக இருக்குமிடமே தெரியாமல் தலைமைப் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றிய ரஹானே இந்த தொடர் முழுதுமே மிகப்பெரிய ஹீரோ.

இந்த தொடர் ஆரம்பிக்க முதல் அவுஸ்ரேலியா முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியது, விராட் கோஹ்லி இல்லாமல் ஒரு போட்டியை இந்தியா வென்றால் ஒரு வருடம் முழுவதுமாக அந்த வெற்றியை நீங்கள் கொண்டாடலாம் என்று.

ஆனால் இன்று தொடரரும் வென்று விட்டார்கள் பிரிஸ்பேனையும் கலங்கடித்து விட்டார்கள், ஒரு வருடம் என்ன ஒரு யுகம் முழுக்க கொண்டாடினாலும் தீராது அந்த போதை.

வாழ்த்துகள் ரஹானே அன் கோ...!!!

- அபியூத்