(எம்.எப்.எம்.பஸீர்)

ஒரு வருடத்திற்கும் அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய  இன்று உத்தரவிட்டார். 

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று சி.ஐ.டி.யில் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 13 ஆம் திகதி விதித்த உத்தரவை நடைமுறைப்படுத்தி சந்தேகநபரை பிணையில் விடுவித்த மேலதிக நீதவான், வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கொழும்பு மேலதிக நீதவானால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.  

குற்றச் செயல் ஒன்றினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்கள்  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, நீதிமன்றத்தில் இடம்பெறும் எந்த வழக்கு நடவடிக்கையையும் ஊடகங்களுக்கு அறிவிக்கக் கூடாதென மேலதிக நீதவான் சந்தேகநபரை எச்சரித்தார்.