(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடியை எதிர்க்கொள்ளும் பொருட்டு அதியுயர் விஞ்ஞான தொழினுட்பத்தை உள்ளடக்கி கொவிட்-19 வைரஸ் தொற்றினை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுகூடத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான அனுமதி எமக்கே முதல் தடவையாக கிடைக்கப் பெற்றுள்ளது என க்ரீடன்ஷ் ஜெனொமிக்ஷ் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் வாஸ் எஸ்.எஸ்.ஞானம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தியுள்ளது.நோய் தொற்றினை கண்டறிவது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வு, பரிசோதனை நடவடிக்கைகளில் தனியார் துறையினரது பங்களிப்பு தற்போது பகுதியளவில் காணப்படுகிறது.கொவிட் -19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள தேசிய குறிப்பாக சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்க்கொள்ளும் பொருட்டு வைத்தியர் பரணவிதாரனவின் தலைமைத்துவத்தின் கீழ் சுகாதார தரப்பினர், சுகாதார நலன் வல்லுநர்கள், மற்றும் தரவு முறைமைகள், நடைமுறைகள் என்பவற்றுடன் கூடிய அதியுயர் தொழினுட்பத்தை உள்ளடக்கி கொவிட்-19 வைரஸ் கண்டறியும் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

உயர் செயற்பாடு, வினைத்திறனான மற்றும் துரிதமான  சேவையினை வழங்கும், மருத்துவ மரபணு ஆய்வுகூடமாக கொவிட்-19 வைரஸ் கண்டறியும் நிலையம் காணப்படுகிறது. கிறீடன்ஷ் மரபணு சேவையானது, உயர்தர பரிசோதனை சேவைகளையும், உற்பத்திகளையும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மரபணு பரிசோதனை சந்தையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கிறீடன்ஸ் நிறுவனம் இந்நியாவின் தெற்காசிய சுகாதார நலன்சேவை வழங்குநராக தொற்று நோய் தொடர்பில் நீண்டகால தனித்துவத்தை கொண்டுள்ளது. கிறீடன்ஷ் மரபணுக்கள்,தொற்று நோய் ரீதியான விருதுகளை பெற்றிருப்பதுடன் பூகோள மட்டத்தில் பல்வேறுப்பட்ட பங்காளர்களைக் கொண்டுள்ளது.

மேலும், ஏனைய ஆய்வுகூடங்களை காட்டிலும் தனித்துவமான பி சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள எமது நிறுவனத்துக்கு மாத்திரமே முதல் தடவையாக சுகாதார அமைச்சினால் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.