(எம்.மனோசித்ரா)

விவசாயிகளை நிறுவனங்களுக்கு இரையாக்கும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் புதிய சட்டமொன்று தயாராரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இன்று செவ்வாய்கிழமை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விவசாய போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சி உள்ளிட்டவை கலந்து கொண்டிருந்தன.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த விவசாய போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவிலுள்ள விவசாயிகள் அந்த அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட மூலத்திற்கு எதிராகவே அவர்கள் போராடுகின்றனர். நாமும் அதனை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

ஒரு நாட்டில் உணவு பொருட்கள் உற்பத்தி எனும் போது சுமார் 70 வீதமான உற்பத்திகள் விவசாயிகளினாலேயே முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால் தற்போது சில நிறுவனங்கள் அதனை கைப்பற்றியுள்ளன. இது போன்று உலகலாவிய ரீதியிலுள்ள தனவந்தர்கள் விவசாயிகளை நெருக்கடிக்குள் தள்ளி உணவு உற்பத்தியை கையகப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட இதுவே நடக்கிறது. விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் இயந்திரங்கள் என்பவற்றை தயாரிக்கும் உரிமையையும் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இன்னும் நிலம், நீர் என்பவற்றை மாத்திரமே கைப்பற்ற வேண்டியிருக்கிறது.

உலகிலுள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் இடங்களையும் நீர் போன்வற்றையும் தனவந்தர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட இதுவே நடக்கிறது. எனவே விவசாயிகளை நிறுவனங்களின் கூலிகளாக்க முயற்சிக்க வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்றார்.