(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சிறைப்படுத்தப்பட்டுள்ள பிரேமலால் ஜெயசேகர எம்.பியை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர சபாநாயகர் அனுமதி  வழங்கியதைப்போல  ரஞ்சன் ராமநாயக எம்.பியையும் பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க  சபாநாயகர் தீர்மானம் எடுத்திருக்க வேண்டும். 

ரஞ்சன் ராமநாயக எம்.பியை ஏன் இன்றைய தினம் பாராளுமன்றதத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர். 

அரசியல் அமைப்பின் பிரகாரம் ரஞ்சன் ராமநாயகவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ஆறு மாத காலத்தின் பின்னரும் நீக்க முடியாது, அதையும் மீறி செயற்பட முயற்சித்தால் அதற்கு எதிராக ஜனநாயக ரீதியில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் எனவும் அவர்கள் சபையில் வாதிட்டனர்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்ற அமர்வுகள் கூடிய வேளையில் பிரதான எதிர்க்கட்சியினர், சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக எம்.பியை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர வேண்டும் என சபாநாயகரிடம் வாதிட்டனர். 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில்,

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயகவின் பாராளுமன்ற ஆசனமும் ஆறு மாதத்தில் பறிபோகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஆகவே ஆறு மாதகாலத்திற்கு பின்னரே அவரது பாராளுமன்ற ஆசனம் பறிபோகும் அதுவரை அவரது ஆசனம் அவ்வாறே இருக்கும் என்பதே அவரது கருத்தின் வெளிப்பாடாகும். இது குறித்து நாம் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளோம். 

அரசியல் அமைப்பின் பிரகாரம் அவரது பாராளுமன்ற ஆசனம் எந்த சந்தர்ப்பத்திலும் வெற்றிடமாகாது என எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அரசியல் அமைப்பின் 66 ஆவது சரத்து, 89வாது சரத்து, 91ஆவது சரத்து, 105 ஆம் சரத்து ஆகியவற்றின் அடிப்படையில்  ரஞ்சன் ராமநாயகவின் பாராளுமன்ற ஆசானம் ஆறுமாத காலத்தின் பின்னரும் பறிபோகாது. தேர்தல்கள் ஆணைக்குழு அவ்வாறு கூறி நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக சகல விதத்திலும் முறையான ஜனநாயக ரீதியிலான நடவடிக்கை எடுக்க நாம் தயாராக உள்ளோம். 

இந்த விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பை கேள்விக்கு உற்படுத்துவது அல்ல எமது நோக்கம், நீதிமன்ற தீர்ப்பு சரியாக செயற்பட்டுக்கொண்டுள்ளது.

நாம் கூறுவது நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதற்கு அமைய ரஞ்சன் ராமநாயகவின் பாராளுமன்ற உறுப்புரிமை குறித்தே நாம் கேள்வி எழுப்புகின்றோம். 

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதத்தை பாதுகாக்கும் நபர் சபாநாயகர் என்ற ரீதியில், ரஞ்சன் ராமநாயக எம்.பியை ஏன் இன்றைய தினம் பாராளுமன்றதத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவில்லை. ரஞ்சன் ராமநாயக என்பவர் மக்கள் மனங்களை கவர்ந்த, மக்களை நேசிக்கும், களவு, பொய், ஊழல் இல்லாத, உண்மையான அரசியல்வாதி.

அவரது சிறைப்படுத்தலை அடுத்து நாட்டு மக்களின் வெளிப்பாடு என்ன என்பதை அனைவரும் அறிந்திருப்பர். அவ்வாறு இருக்கையில் ஏன் அவரை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்கவில்லை என சபாநாயகாரிடம் கேள்வி எழுப்பினார்.

இதன்போது சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கோரடானாவ லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் குறித்த தீர்மானம் எடுக்கும் உரிமை சபாநாயகரிடம் உள்ளது, இதில் நீதிமன்றமோ, சட்டமா அதிபர் திணைக்களமோ தலையிட முடியாது.

அனுர பண்டாரநாயகவின் விடயத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது, சட்டமா அதிபர், நீதிமன்றம் பரிந்துரைத்தால் ரஞ்சன் ராமநாயகவை பாராளுமன்றத்திற்கு அழைப்பதாக சபாநாயகர் அண்மையில் தெரிவித்திருந்தார். 

பிரேமலால் ஜெயசேகரவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்த வேளையில் சட்டமா அதிபர் அதற்கு இணங்கவில்லை, அழைத்தவர வேண்டாம் என சட்டமா அதிபர் தெரிவித்தும் அவர்களின் அறிவிப்பை கவனத்தில் கொள்ளாது பிரேமலால் ஜெயசேகரவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர அனுமதித்ததும் சபாநாயகரே.

எனவே ரஞ்சன் ராமநாயகவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர அனுமதிக்கும் உரிமை சபாநாயகரிடம் மட்டுமே உள்ளது, எனவே அந்த உரிமையை பயன்படுத்தி ரஞ்சன் ராமநாயகவை பாராளுமன்றதத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நளின் பண்டார எம்.பி கூறுகையில்,

பிரேமலால் ஜெயசேகரவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளையில் எதிர்க்கட்சி தெரிவித்த கருத்தல்ல இங்கு முக்கியமானது, அவ்வாறான நேரத்தில் சபாநாயகர் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானமே இதில் முக்கியமானது. அதேபோல் ரஞ்சன் ராமநாயக இந்த சமூகத்திற்கு மோசமான எதனையும் செய்யவில்லை, குடு கடத்தவில்லை, கொலை செய்யவில்லை, களவெடுக்கவும் இல்லை. 

இவை அனைத்திற்கும் எதிராக பேசியவரையே  இன்று சிறையில் அடைத்து வைத்துள்ளனர். ரஞ்சனுக்கு எதிராக போராடும் அனைவரும் குடு வியாபாரிகள், குற்றவாளிகள், அவர்களே இன்று ஆளும் தரப்பிலும் இருந்துகொண்டு தீர்மானம் எடுக்கின்றனர் என்றார்.