அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தக்க வைத்துக் கொண்டது.

இந் நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதவில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்போன் மைதானத்தில் 32 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியா வீழ்த்தப்படுவது இதுவே முதன் முறையாகும். குறித்த மைதானத்தில் அவுஸ்திரேலிய அணி 1988 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகளுடனான போட்டியில் தோல்வி கண்டது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியமான டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

இதில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 369 ஓட்டங்களையும், இந்தியா 336 ஓட்டங்களையும் எடுத்தது. 

33 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

டேவிட் வோர்னர் 20 ஓட்டத்துடனும், மார்கஸ் ஹாரிஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் நான்காவது நாளான நேற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் துரிதமான ஓட்டக் குவிப்பில் கவனம் செலுத்தினர். 

குறிப்பாக நடராஜனின் ஓவரில் ஹாரிஸ் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். அதனால் 11.2 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 50 ஓட்டங்களை பெற்றது. அதன் பிறகு இந்திய பந்து வீச்சாளர்களது பந்துப் பரிமாற்றமானது இறுக்கமாக இருந்தது.

89 ஓட்டங்கள் குவித்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட் ஷர்துல் தாகூரினால் தகர்த்தெறியப்பட்டது.

அவரது பந்து வீச்சில் ஹாரிஸ் 38 ஓட்டத்துடன் விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்திடம்  பிடிகொடுத்தார். அடுத்த ஓவரில் வொஷிங்டன் சுந்தரின் சுழலில் டேவிட் வார்னர் 6 பவுண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மார்னஸ் லபுஸ்சேனும், ஸ்டீவ் சுமித்தும் அதிரடி காட்டினர். 

எனினும் லபுஸ்சேன் 25 ஓட்டங்களுடன் மொஹமட் சிராஜின் பந்துப் பரிமாற்றத்தில் ரோகித் சர்மாவிடம் பிடிகொடுத்தார். அதன் பிறகு அந்த அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட் சரிந்த வண்ணம் இருந்தது. 

ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு அவுஸ்திரேலிய அணி 243 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. 

மழை ஓய்ந்ததும் தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய 75.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸுக்காக 294 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் சிராஜ் 5 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 328 ஓட்டம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அந்த வெற்றியிலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 1.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி நான்கு ஓட்டங்களை எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. அத்துடனேயே நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

இந் நிலையில் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் ஆரம்பிக்க ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வர ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்துப் பரிமாற்றத்தில் இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அதன்படி ரோகித் சர்மா 7 ஓட்டங்களுடன் பேட் கம்மின்ஸின் பந்துப் பரிமாற்றத்தில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் டீம் பெய்னிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக புஜரா களமிறங்கிய துடுப்பெடுத்தாட இந்திய அணி மதியநேர உணவு இடைவேளைக்கு முன்னர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களை எத்திருந்தது.

சுப்மான் கில் 64 ஓட்டத்துடனும், புஜாரா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் சுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 91 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவர் நாதன் லியோன்னின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனால் இந்திய அணியின் இரண்டாவது விக்கெட் 132 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 

நான்காவது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷாத் பந்த் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடினார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதன்போது இந்தியாவின் வெற்றிக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் மிச்சம் இருக்க குறைந்தது 37 ஓவருக்கு 145 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தது.

தேனீர் இடைவேளையின் பின்னர் ரிஷாத் பந்த் மற்றும் புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷாத் பந்த் 100 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால் ஒன்பது ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற ரிஷாத் பந்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இறுதி 8 ஓவரில் 50 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தபோது, அகர்வாலின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய வொஷிங்டன் சுந்தர், கம்மின்ஸின் பந்து வீச்சில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசி நம்பிக்கை அளித்தார்.

எனினும் இக்கட்டான நிலையில் வோஷிங்டன் சுந்தரும் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சர்துல் தாகூர் களமிறங்கினார்.

நான்கு ஓவர்களுக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி 97 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களை பெற்று, அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் ரிஷாத் பந்த் 89 ஓட்டங்களுடனும், நவ்தீப் ஷைனி எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ரிஷாத் பந்தும், தொடரின் நாயகனாக பேட் கம்மின்ஸும் தெரிவானார்கள்.