(செ.தேன்மொழி)

மேல் மாகாணத்திலுள்ள அரச , தனியார் நிறுவனங்கள் மற்றும் பல் பொருள் அங்காடிகள் தொடர்பில் மேற்கொளள்ளப்பட்டு வரும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 686 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

மேல்மாகணத்தில் இதுவரையில் 4 ஆயிரத்து 134 நிறுவனங்களை , சுகாதார பிரிவினரும் , பொலிஸாரும் இனைந்து சோதனைச் செய்துள்ளனர். அவற்றுள் 3 ஆயிரத்து 448 நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றியிருந்ததுடன், எஞ்சிய 686 நிறுவனங்களில் இந்த சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை ஆறு மணியுடன் முடிவதைந்த 24 மணித்தியாலயத்திற்குள் மேல் மாகாணத்திலுள்ள 1,104 நிறுவனங்கள் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 848 நிறுவனங்கள் சட்டவிதிகளை பின்பற்றியிருந்ததுடன்,  எஞ்சிய 126 நிறுவனங்களில் அந்த சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சுகாதார அமைச்சினால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, அனைத்து நிறுவனங்களும் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.