எம்முடைய உடல் இயற்கையுடன் இணைந்து இயங்குகிறது என பல்வேறு தருணங்களில் மருத்துவ ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதாவது சூரிய ஒளி மற்றும் இரவு நேரம் என்ற சுழற்சிக்கு ஏற்ப எம்முடைய உடலில் உயிரியல் கடிகார சுழற்சி நடைபெறுகிறது.

இந்த உயிரியல் கடிகார சுழற்சிக்கு எதிராக நாம் செயல்படும்போது, எம்முடைய உடலின் இயக்கங்கள் சீர்குலைந்து, புற்றுநோய் செல்கள் புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய வகையில் தூண்டப்படுகின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். 

அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு அவர்களின் உயிரியல் கடிகார சுழற்சியில் ஏற்படும் சீர்குலைவு தான் காரணம் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஒளி மற்றும் ஒளியின்மையை பொறுத்தே எம்முடைய உடலில் உள்ள உயிரியல் கடிகாரத்தின் சுழற்சி அமையப் பெற்றிருக்கிறது. 

பகலில் பணி செய்வதும், இரவில் உறங்குவதும் போன்ற வகையில் தான் எம்முடைய உயிரியல் கடிகாரம் பணியாற்றுகிறது.

இந்த லயத்திற்கு எதிராக அதாவது இரவு நேரத்தில் பணியாற்றுவதும், பகல் நேரத்தில் உறங்குவதுமாக மாற்றி அமைத்துக் கொண்டால்.. எம்முடைய உடலில் இயல்பாக நடைபெறும் உயிரியல் கடிகார சுழற்சியில் மாற்றமும், சீர்குலைவும் ஏற்படுகிறது. தூக்கமின்மை பாதிப்பும் உண்டாகிறது. 

இதனால் ஹோர்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு, புற்றுநோய் செல்கள் தூண்டப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ப்ராஸ்டேட் புற்று நோயைத் தோற்றுவிக்கும் செல்கள் தூண்டப்பட்டு புராஸ்டேட் புற்றுநோயை உண்டாக்குகின்றன.

அத்துடன் புராஸ்டேட் புற்று நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பலனளிக்க வேண்டும் என்றாலும், உயிரியல் கடிகார சுழற்சி இயற்கைக்கு ஏற்றவகையில் அமைக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இதனிடையே புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பை குறைக்க கோப்பி அருந்தினால் நிவாரணம் கிடைக்கும் என சீன மருத்துவர்கள் அண்மையில் கண்டறிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.