கிழக்கு முனையச் சிக்கல்

Published By: J.G.Stephan

19 Jan, 2021 | 10:53 AM
image

-ஹரிகரன் -

“கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது”

தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது.

கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

ஆனால், இந்தியாவின் உதவியுடன் இந்த முனையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதனை துறைமுக தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன. தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன.

அதுமட்டுமன்றி, கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக, அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றன.

இது, கிழக்கு முனைய திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையக் கூடிய சாத்தியங்களையே வெளிப்படுத்துகிறது. அதேவேளை, அரசாங்கம் இன்னொரு புறத்தில், இந்தியாவின் கடுமையான அழுத்தங்கள் எதிர்கொண்டிருக்கிறது.

கிழக்கு முனைய அபிவிருத்தியை, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு, முன்னைய ஆட்சிக்காலத்தில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.


அந்த உடன்பாட்டுக்கு அமைய, துறைமுக அதிகார சபை 51 வீத பங்குகளையும், இந்தியாவும், ஜப்பானும் எஞ்சிய 49 வீத பங்குகளையும் கொண்டிருக்கும் என்று இணங்கப்பட்டது.

எனினும், கிழக்கு முனையத்தின் மீதான உரிமை விட்டுக் கொடுக்கப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் தான், இதனை ஊதிப் பெருப்பித்து, நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக பிரசாரம் செய்தது.

தேர்தல் வெற்றியை மையப்படுத்தியும், சீனாவை திருப்திப்படுத்தும் வகையிலும், தற்போதைய அரசாங்கம் அந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

இப்போது, அரசாங்கம், மீண்டும், இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது.

49 வீதமான முதலீட்டை இந்தியா செய்யுமானால், முனையத்தின் மீதான நூறுசதவீத உரிமை இழக்கப்படும் என்பது, தொழிற்சங்கங்களின் வாதம்.

அரசாங்கமோ, 51 வீதமான உரிமை இருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறது.

இந்த இடத்தில் சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், அல்லாடுகின்ற நிலைக்கு வந்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.

கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது.

இந்த விடயத்தில் சீன புலனாய்வு அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக, இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது.

இதுகுறித்து அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசின் உயர்மட்டச் சந்திப்புகளின் போது சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் தலையீடுகள், கிழக்கு முனைய விவகாரம் என்பன தொடர்பாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்த நிலையில் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பயணத்துக்கான முன்னறிவித்தல் கூட, 5 நாட்களுக்குள் தான், கொழும்புக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, ஜெய்சங்கர் கொழும்பு வருவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, கொழும்பில் உள்ள சீன தூதுவர் கீ சென்ஹோங் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயுடன் அவசர சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார்.

அதனை விட, சீன புலனாய்வு அமைப்பின் தலையீடு குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சந்திப்புகளில் குறிப்பிட்டிருந்த அதேவேளை, இலங்கையின் இரண்டு பிரதான புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜெய்சங்கர் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற கடந்த 7ஆம் திகதி, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் மற்றும், துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் புனீத் சுஷில் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர்.

அதற்கு மறுநாள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல், சுரேஸ் சாலேயுடனும் இவர்கள் இருவரும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகளுடன் இவ்வாறான சந்திப்புகள் நடப்பது வழக்கம். 

புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்டுள்ள சந்திப்புகள் வழமைக்கு மாறானவை.

இதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

கொழும்பின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையே இவ்வாறான சூழல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஜெய்சங்கரின் பயணத்தின் போது, கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, 13 ஆவது திருத்த விவகாரத்திலும் சரி,  இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியிருந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, துறைமுக நகரை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, இந்தியா அதனை எதிர்த்தாலும், அவற்றைத் தடுக்க முனையவில்லை.

அதுபோன்றே, கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியாவின் தலையீட்டை சீனா தடுக்க முனைவதை புதுடெல்லியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கிழக்கு முனைய விடயத்தில் இந்திய அரசின் நேரடித் தலையீடு வலியுறுத்தப்படவில்லை. மாறாக, இந்திய நிறுவனத்தின் தனியார் முதலீடு தான் வலியுறுத்தப்படுகிறது.

அதானி குழுமத்தின் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா உறுதியாகவே இருக்கிறது.

அதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம், இந்த முனையத்தின் மூலமே இந்தியாவின், 70 சதவீதமான கொள்கலன்கள் கையாளப்படுகின்றன என்பது தான்.

இவ்வாறான முனையத்தை, விட்டுக்கொடுக்க இந்தியா தயாரில்லை. 

அதற்கு அப்பால், இதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவும் இந்தியா பார்க்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம், அதாவது சர்வதேச கொள்கலன் முனையம், சீனாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2013ஆம் ஆண்டு இதன் உரிமையில் 85 சதவீதம் சீனாவிடம் கொடுக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதனை இப்போதும் சீனாவே முகாமைத்துவம் செய்து வருகிறது.

இந்த முனையம் தான் கொழும்பு துறைமுகத்திலேயே ஆழம் கூடியது, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தக் கூடியது,

இலங்கைக்கு வரும், சீன கடற்படைக் கப்பல்கள் இங்கு தான் தரித்து நிற்கின்றன.

அத்துடன், 2014ஆம் ஆண்டு இந்த இறங்குதுறையில் தான், சீன கடற்படையின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றன.

அதற்குப் பின்னர் தான், இந்த முனையத்தின் ஆபத்தை இந்தியா புரிந்து கொண்டது.

இந்த முனையத்தில் சீனாவின் பல்வேறு நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான சந்தேகங்கள் உள்ளன.

குறிப்பாக, இந்த முனையத்தில் டாங்கிகளை தரையிறக்கக் கூடிய அதிக திறன்கொண்ட பாரம்தூக்கிகளை சீனா பொருத்தி வைத்திருக்கிறது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளை முன்வைத்து வருபவருமான மேஜர் மதன்குமார் கேசரிக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூட, குறிப்பிட்டிருந்தார்.

வழக்கமாக, வர்த்தக துறைமுகங்களில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாரம் தூக்கிகளின் திறனை விட அதிக திறன் கொண்ட பாரம் தூக்கிகளை இங்கு பொருத்தியிருப்பது, இராணுவ நோக்கங்களுக்காகத் தான் என்று இந்தியா சந்தேகிக்கிறது.

இவ்வாறான நிலையில், இந்தியாவின் வலுவான பிரசன்னமும், அங்கு இருந்தால் மட்டுமே, இலங்கை அரசை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம் என்று புதுடெல்லி கருதுவதாக தெரிகிறது.

இந்தநிலையில் தான் புதுடெல்லியின் அழுத்தங்கள் கொழும்புக்கு அதிகரித்திருக்கிறது.

இந்தக் கட்டத்தில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்தின் மூலம் முதலீட்டு அபிவிருத்தியாக காட்டி தப்பிக்க அரசாங்கம் முயன்றாலும், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசுக்கு தலைவலியைத் தரக் கூடும்.

இந்தக் கட்டத்தில் அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், செயற்படுத்தினாலும், கடுமையான நெருக்கடிகளை சந்திப்பதை தவிர்க்க முடியாமல் தான் இருக்கப் போகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48