கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையானது அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இரண்டாம் வாரத்தின் முதலாம் நாளான நேற்றைய தினம் 65 சதவீத மாணவர்களும், 86 சதவீத ஆசிரியர்களின் வருகையும் பதிவாகியுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா கூறியுள்ளார்.

அதன்படி வடமேற்கு மாகாணத்தில் இரு பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஏனைய பாடசாலைகளில் 70 சதவீத வருகை பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக மிகக் குறைந்த வருகையைப் பதிவு செய்துள்ள தெற்கு மாகாணத்தில் 54 சதவீத வருகை பதிவாகியுள்ளதுடன் அங்கு மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாணத்தில் 14 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு 65 சதவீத வருகை பதிவாகியுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் ஒரு பாடசாலை மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு 66 சதவீத வருகை பதிவாகியுள்ளது.

மத்திய மாகாணத்தில் ஐந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு 62 சதவீத வருகை பதிவாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு 70 சதவீத வருகை பதிவாகியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 26 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு 61 சதவீத வருகை பதிவாகியுள்ளது.

ஊவா மாகாணத்தில் இரு பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு 75 சதவீத வருகை பதிவாகியுள்ளது.

மேல் மாகாணத்தை தவிர ஏனைய எட்டு மாகாணங்களிலும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இரண்டாம் வாரத்தின் முதலாம் நாளான நேற்றைய தினம் சராசரியாக 65 சதவீத மாணவர்களின் வருகையானது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முதல் வாரத்தில் இது 54 சதவீதமாக ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.