(இராஜதுரை ஹஷான்)
உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகளை இவ்வாரம் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான உபகுழுவிடம் முன்வைப்போம்.
தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது எமது பிரதான யோசனையாகும். டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் புதியஅரசியலமைப்பு உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுன தேர்தல் மேடைகளில் அரசியலமைப்பு குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அரசியலமைப்பின் 20அவது திருத்தத்துடன் நிறைவு பெறவில்லை.புதிய அரசியமைப்பிற்காகவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள்.
ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து புதிய அரசியமைப்பிற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.
புதிய அரசியமைப்பு தொடர்பான 9 பேர் அடங்கிய உபகுழுவினர் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் அரசியலமைப்பிற்கான மூலவரைபினை சமர்ப்பிப்பார்கள்.
பின்னர் புதிய அரசியமைப்பு குறித்து பாராளுமன்ற தெரிவுகுழு நியமிக்கப்படும் அக்குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் உள்ளடங்குவார்கள்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினர் கோரியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகளை இவ்வாரம் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் முன்வைப்பேன். தேர்தல முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுஜன பெரமுனவின் பிரதான யோசனையாகும்.
விருப்பு வாக்கு முறைமை அனைத்து அரசியல் கட்சிகளுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முறைமையில்மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த தன்மையில் உள்ளன.
ஆகவே புதிய அரசியமைப்பில் தேர்தல் முறைமை பிரதான அம்சமாக கருதப்படும்.டிசெம்பர் மாதத்திற்குள் புதிய அரசியமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.