இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 270ஆக அதிகரித்துள்ளது.

 இன்று பதிவான மரணங்களில் பலர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கொழும்பு 3 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும் முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும் களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவரும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புகளை பேணி 77 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் 332 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 53,409 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 45 820 பேர் குணமடைந்துள்ளதோடு 7324 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 717 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று இன்று  உறுதிப்படுத்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கி பழகியதை அடுத்து கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுய தனிமையில் இருக்க தீர்மானித்துள்ளார்.

கல்வி அமைச்சர் தனது குடும்பத்தாருடன் சுய தனிமையில் உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 8 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.